அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு இந்தியன் வங்கி அதிகாரி வருகை!
பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு இந்தியன் வங்கி அதிகாரி வருகை.
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சென்னையில் சைதாப்பேட்டை இல்லத்திலும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் அழைப்பின் பேரில், இந்தியன் வங்கி அதிகாரி அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கியில் மேற்கொண்டுள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியன் வங்கி அதிகாரி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தடயவியல் சோதனையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.