சீனாவின் ஒத்துழைப்புக்காக காத்திருக்கும் இந்தியா..!
சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போகிறது. சீனாவின் ஒத்துழைப்புடன் இரு நகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரயில் சேவையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தென் இந்தியாவின் இரு முக்கிய பெருநகங்களாக விளங்கும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான ரயில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், பணி மற்றும் தொழில் நிமித்தமாக இரு நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணிப்பவர்களுக்கு விரைவு ரயில் சேவையை வழங்குவது அவசியமாக இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க சீனாவிடம் உதவி கோரப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஆய்வுப் பணிகள் முடிந்தாலும், இந்த திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இதுவரை இல்லை. கடந்த ஆண்டு டோக்லாம் எல்லைப் பிரச்னை காரணமாக இந்த விரைவு ரயில் திட்டத்தில் சீனா ஆர்வம் காட்டவில்லை.
இதுகுறித்து ராஜீவ் குமார் கூறுகையில்,” சென்னை – பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருமாறு சீனாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன்படி, மணிக்கு 150 கிமீ வேகத்தில் இந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். அதேபோன்று, ஆக்ரா- ஜான்சி இடையிலான ரயில் வழித்தடத்தை மேம்படுத்தி தரவும் சீனாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை – பெங்களூர் வழித்தடத்தில் சதாப்தி ரயில்கள் 5 மணிநேரத்திலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் 6.30 மணிநேரத்திலும் கடக்கின்றன. அதிவிரைவு ரயில்கள் வரும்போது சராசரி வேகம் வெகுவாக உயர்த்தப்படும். தற்போது உள்ள ரயில்களின் அதிகபட்ச சராசரி வேகம் 80 கிமீ என்பது 150 கிமீ வேகம் வரை அதிகரிக்கப்படும். இதனால், 3 மணிநேரத்தில் இரு நகரங்களையும் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளன.
உலகிலேயே அதிவேக ரயில்களுக்கான தொழில்நுட்பத்தில் சீனா சிறந்து விளங்குகிறது. அத்துடன் உலகிலேயே அதிகபட்சமாக 22,000 தொலைவுக்கான அதிவிரைவு ரயில் வழித்தட கட்டமைப்பை அந்நாடு அமைத்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் ஒத்துழைப்புடன் சென்னை- பெங்களூர் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.