தேசிய கொடி நாள்: “மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம்” – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

Default Image

சென்னை:முப்படை வீரர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடி நாளான இன்று கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிக்க வேண்டும் என்று மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய நாட்டில் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் 1949 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளில் தியாக உணர்வோடு சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் பொருட்டு கொடிகள் விற்பனையின் மூலம் திரட்டப்படும் நன்கொடை நிதியை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

flag day

இந்நிலையில்,நம் நாடு பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் தன்னலம் கருதாத தியாக வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்குத் தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தைப் பெற்று வருவதாகவும்,இந்த ஆண்டும் பெரும் அளவில் நிதி வழங்கி முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நமது வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள கொடிநாள் செய்திக்குறிப்பில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“பெற்ற தாயையும்,பெற்றெடுத்த செல்வங்களையும்,உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து,பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாளாகும்.

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்து தருதலும் நமது கடமையன்றோ!

அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடிநாளின் கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம். அந்த நிதி அவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு வகையிலும் பயன் தரும்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் தன்னலம் கருதாத அந்தத் தியாக வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்குத் தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தைப் பெற்று வருகிறது. எனவே, இவ்வாண்டும் பெரும் அளவில் நிதி வழங்கி முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம்”,என்று தெரிவித்துள்ளார்.

flag day,cm

இதனைத் தொடர்ந்து,இன்று தலைமைச்செயலகத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி அவர்களிடம் கொடிநாள் நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்