இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டி: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம்!
இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியை காண மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 22-ம் தேதி) முதல் தொடங்குகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் கொல்கத்தா, புனே, சென்னை, ராஜ்கோட் மற்றும் மும்பை (வான்கடே) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரண்டாவது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்திலும், மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.