விஜய் பேச்சால் இந்தியா கூட்டணிக்கு வலு கிடைத்துள்ளது.! செல்வப்பெருந்தகை பேச்சு.!
விஜய் பேச்சால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுப்பெறுமே தவிர சலனம் ஏற்படாது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தமிழக அரசியல் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றியும், விஜயின் அரசியல் பேச்சுக்கள் பற்றியும் பேசினார். அதில் குறிப்பாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதனை வரவேற்றும், இது இப்போது மிகவும் விரைவாக கூறப்பட்ட கருத்து என சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜயின் பேச்சு குறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், விஜயின் பேச்சு இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தியா கூட்டணிக்கு அவரது பேச்சு கூடுதல் வலுசேர்த்துள்ளது. சலசலப்பு ஏற்படும் என நினைத்தவர்களுக்கு தான் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. அதனால் தான் கடந்த தேர்தலில் 40க்கு 40 என அனைத்து தொகுதிகளையும் வென்றுள்ளோம்.
2006 – 2011-இல் திமுகவுக்கு மெஜாரிட்டி இடங்கள் கிடைக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஆதரவளித்து தான் ஆட்சி அமைக்கும் நிலை இருந்தது. அப்போது தலைமையில் இருந்த சோனியா காந்தி, பெருந்தன்மையுடன் அமைச்சரவை இடம் இல்லாமல் ஆட்சியமைக்க திமுகவுக்கு ஆதரவளித்தார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் அமைச்சரவை இடம் இன்றி ஆதரவளித்தது. இதுதான் காங்கிரஸின் பெருந்தன்மை.
அடுத்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்பதை முடிவு செய்வது மக்கள் கையில் தான் உள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது நாங்கள் எங்கள் கட்சியை வலுப்படுத்த வேலை செய்து வருகிறோம். ” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.