தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்.! முக்கிய கோரிக்கைகள் ஏற்பு.!
கோவை மாவட்ட தூய்மை பணியார்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வெகு நாட்கள் கோரிக்கையான வேலை நேரம், வார விடுமுறை, பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
தூய்மை பணியாளர்களின் 2 நாள் போராட்டம் இன்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கோவை மாவட்ட ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா உடன் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில், பணிநேரம் தொடங்குவதை காலை 6 மணியில் இருந்து 7 மணியாக மாற்ற வேண்டும். வார விடுமுறை வேண்டும், 10 ஆண்டுகள் தொடர்ந்து வேலைபார்த்து வரும் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மற்ற வேண்டும். அரசு அறிவுறுத்தலின்படி ஒரு நாள் குறைந்த பட்ச வருமானம் 721 என நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதில் பணி நேரம், வார விடுமுறை போன்ற சிறிய கோரிக்கைகள் மட்டும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வரும் கோவை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பப்படும். என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.