அதிகரிக்கும் கொரோனா தொற்று…! வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்ல தடை…!
சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றன. எனவே மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 9-ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருவதற்கு ஆட்சியர் கார்மேகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு வரும் 9-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் தடை நீட்டிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிற நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்றும், உள்ளூர்வாசிகள் தனிநபர் ஆவணங்களை காண்பித்து செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.