போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.
திருநெல்வேலியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று தொடங்கி வைத்தார்கள். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போல் பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் கிட்டத்தட்ட 17,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் எந்தவித பாதிப்பும், சிரமமில்லாமலும் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறினார். பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து, சசிகலா குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சசிகலாவுக்கு எல்லாம் பதில் சொல்ல நாங்க தயாராக இல்லை எனவும் பதிலளித்தார். இதனிடையே, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.