முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்வு; முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, மாத ஓய்வூதியம் வரும் ஜூன் முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24 பட்ஜெட் கூட்டத்தொடரின் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கைககள் உள்ளிட்ட விவாதங்களில் அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்து வந்தனர்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.25,000 இலிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாள் விழா வருகிற நிலையில், அதனை ஓராண்டுக்கு நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குவதை முன்னிட்டு, அதனை சிறப்பிக்கும் விதமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது எனவும் வரும் ஜூன் மாதம் முதல் இந்த புதிய ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.