ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு உதவித்தொகை அதிகரிப்பு.! அரசாணை வெளியீடு.!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.900-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி அறிவித்தார். தற்போது இந்த உணவுத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – விடுதிகள் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத்தொகை 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.