நாடாளுமன்ற கட்டட திறப்பு – விசிக புறக்கணிப்பதாக அறிவிப்பு!
குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நடந்து கொள்வதற்கு விசிக கண்டனம்.
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இரு அவைகளுக்கும் தலைவரான ஜனாதிபதியை அழைக்காமல் அவரை அவமதிப்பால் விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பார் என அறிவித்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதியே ஆவார். சிறப்பு அதிகாரங்கள் கொண்ட குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நடந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் பெயரை கூட அழைப்பிதழில் குறிப்பிடாமல் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுகிறது. பழங்குடியினத்தவரை ஜனாதிபதி ஆக்கினோம் என தேர்தல் ஆதாயத்துக்காக பேசிய பாஜக, தற்போது அவரை அவமதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் விழாவின்போது அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பாஜக அரசு அழைக்கவில்லை.
பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சனாதன கொள்கையை உயிர் மூச்சியாக கொண்டுள்ளது பாஜக என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதுபோன்று, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தலைவரை அவமதித்துள்ளதால் மே 28-ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது.