இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
இன்று கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்திருந்த நிலையில், இன்று (27.11.2024) எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்றே அறிவித்துவிட்டார்கள். அப்படி நேற்று அறிவித்த அறிவிப்பின் படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
அதற்கு அடுத்ததாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்தார். அடுத்ததாக கனமழையை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை என அறிவித்தார். அதைப்போல, தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.