சூப்பர்…தேர்தலுக்கு முன்னரே 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
தேனி:பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் 1,10,11 வார்டுகளில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில்,வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,முறைப்படி விவரம் இல்லாத மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட உள்ளன.இதனையடுத்து,மனுக்களை திரும்பப்பெற பிப்.7ம் தேதி கடைசி நாள் ஆகும்.அன்றைய தினத்தில் களத்தில் உள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.1374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில்,தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் 1,10,11 வார்டுகளில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பகுதிகளில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.இதனால்,1-வது வார்டில் முத்துச்செல்வி என்பவரும்,10-வது வார்டில் ஜெயராமன் என்பவரும் மற்றும் 11-வது வார்டில் விமலா என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.