அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”
இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் காரசாரமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்களை பார்த்து, ” நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நீட் கொண்டு வந்த பிறகு, தற்போது அதனை சரி செய்ய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ நான் அந்த விவாதத்திற்குள் போகவில்லை. இப்போது இருக்கும் நீட்டை நீக்கினால் தான் கூட்டணி அமைப்போம் என பாஜகவிடம் கூற உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
நாங்கள் நீட்டை விலக்குவோம் என வாக்குறுதிகள் கொடுத்தது உண்மை தான். அதில் நாங்கள் மறுப்பு சொல்லவில்லை. எங்கள் கூட்டணி (இந்தியா) ஆட்சி அமைந்து இருந்தால் நிச்சயமாக அதனை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறீர்களே? இந்த கண்டிஷன் போட்டு கூட்டணி அமைக்க உங்களுக்கு அருகதை இருக்கிறதா?
நாங்கள் யாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. 2026-ல் இல்லை 2031-ல் கூட நங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என கூறிவிட்டு இப்பொது கூட்டணி அமைத்துள்ளீர்களே, யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.
அதன் பிறகு ஏற்பட்ட அமளியில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எப்போது பார்த்தாலும் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்துவ விட்டது என திமுக மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் துடிதுடித்து பேசுகிறார். நீங்கள் (முதலமைச்சர்) ஏன் பதறுகிறீர்கள்? ஏன் பயப்படுறீர்கள்? அதிமுக, எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். 2026-ல் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. எங்கள் கூட்டணியை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்துவிடும் என அவர் பதட்டப்படுவதை நாங்கள் பார்த்தோம்.
அதிமுகவை பொறுத்தவரை, திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் இருக்கும் கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி அமைப்போம். நிச்சயமாக 2026-ல் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம். 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும்.”என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.