“எல்லாம் ‘மாப்பிள்ளை’ செந்தில் பாலாஜிக்கு தெரியும்..,” உளறி கொட்டிய அதிமுக எம்.எல்.ஏ!
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன், பழக்க தோஷத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 'மாப்பிளை' என உரிமையோடு பேசியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.
அப்போது பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், ” தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுறாங்க. அதன் மூலம் 100 கிலோ வாட் என்ற அளவில் மட்டும் தான் மின்சாரம் எடுக்க நாம் (அரசு) அனுமதிக்கிறோம். வெயில் குறைவாக இருக்கும் காலத்தில் அந்த மின்சாரம் போதுமானதாக இல்லை. அதனால் 100 கிலோ வாட் என்பதை 120 கிலோ வாட் என்ற அளவுக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். அதனால் மின்சாரத்துறைக்கு எந்த நஷ்டமும் இல்லை என கூறிவிட்டு,
“எல்லாம் மாப்பிளைக்கு தெரியும். ” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஊர் வழக்கத்தில் அழைத்துவிட்டார் அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன். அவர் அப்படி கூறியதும் அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிடவே, அவை முழுக்க சிரிப்பலையாக் மாறியது. உடனே தனது வார்த்தை தவறை உணர்ந்து, “சாரி சாரி அவரிடம் பேசி பேசி இந்த வார்த்தை வந்துவிட்டது. ” என கூறிவிட்டு, அதேபோல சோலார் லைனில் அனுமதி கிடைக்க காலதாமதமாகிறது. அதிலும் சீக்கிரம் அனுமதி கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார் அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன்.
இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ” தனியார் நிறுவன சோலார் பேனல் குறித்து உறுப்பினர் எடுத்து சொல்லி இருக்கிறார். மிக விரைவாக அவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் கூடுதலாக தேவை இருப்பதை அவர் எடுத்து சொல்லி இருக்கிறார். அதனை அதிகாரிகளிடம் பேசி அதற்க்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கொள்கிறேன் என அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.