குமரி மாவட்டத்தில் விமானம் நிலையம் உறுதி..,
நாகர்கோவில்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை,துவங்கி வைத்தார். எம்.பி.விஜயகுமார் குத்து விளக்கேற்றினார். இந்த கண்காட்சியில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவி தொகைகள், மகப்பேறு நிதி உதவி, திருமண நிதி உதவி போன்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதில் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அதன் பின் எம்.பி.விஜயகுமார் பேசுகையில், பல்வேறு திட்டங்கள் குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் வந்துள்ளன. சூழியல் பூங்காவை சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மகளிர் மேம்பாட்டுக்காக சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் கண்டிப்பாக விமானம் நிலையம் வந்தே தீரும்.
தமிழக அரசு இந்த திட்ட ஆய்வுக்காக நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக தான் தாமதம் ஆகி வருகிறது. ஆனால் கண்டிப்பாக விமானம் நிலையம் வரும்.இவ்வாறு அவர் பேசுகையில் கூறினார்.