தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை, ஜெயலலிதாவை போல் தான் என் முடிவும்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
பாஜகவினரை அதிமுக திட்டமிட்டே இழுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்:
சமீப நாட்களாக தமிழ்நாடு பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் தங்களது பொறுப்பில் இருந்து விலகியது பாஜக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்திருந்தார். நிர்மல் குமார் விலகிய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து, நேற்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்து, இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமாரை போல் தனது ட்விட்டர் பக்கத்தில் திலிப் கண்ணனும், மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். மேலும், பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்தார்.
அண்ணாமலை ஆதரவாளர் கண்டனம்:
பாஜகவில் இருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், அண்ணாமலை ஆதரவாளரும், பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளருமான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சாடுவது போல் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்.
கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது என்றும் கட்சி மாறி, பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை வேகலப்படுத்தி ரசிப்பவர் தலைமைக்கு தகுதியானவரா? என மறைமுகமாக கடுமையாக விமர்சித்திருந்தார். அமர் பிரசாத் ரெட்டி, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருப்பதால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்றும் கேள்வியும் எழுந்துள்ளது.
திராவிட கட்சிகள் – அண்ணாமலை குற்றசாட்டு:
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்று அதிமுகவை மறைமுகமாக சாடியுள்ளார். பாஜகவில் இருந்து இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன. தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும்.
பாஜக வளர்ந்து வருகிறது:
திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. திராவிட கட்சிகளில் இருப்போர் பாஜகவுக்கு வருகின்ற நிலை மாறியுள்ளது. பாஜகவில் இருந்து திராவிட கட்சிகளுக்கு செல்கின்றனர், ஆனால் பாஜக வளர்ந்து வருகிறது. பாஜகவினரை இணைத்து கொண்டு தங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார். பாஜகவில் இருந்து ஆட்களை கொண்டு சென்றால் தான் அதிமுக வளரும் என்ற நிலை உருவாகியுள்ளது.
எனவே, திராவிட கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் அந்த கட்சிகள் வளரும் என்ற நிலை இப்போது உருவாகி உள்ளது. பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்து செல்லட்டும் என்றுள்ளார்.
மறைமுகம எச்சரிக்கை:
கொள்கை உள்ளவர்கள் கட்சியில் இருப்பார்கள். பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லதுதான், அப்போதுதான் புதியவர்களுக்கு பதவி வழங்க முடியும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.