தமிழகத்தில் 1.2% எனும் அளவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுதும் இது குறித்து பேசியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்குவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் அதிகம் நடைபெறுவதாகவும் கூறிய அவர், தமிழகத்தில் 1.2% எனும் அளவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.