குற்றாலத்தில் தொடர் சாரலால்..! மகிழ்ச்சியில் மக்கள்..!
குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் விதமாக அமைந்துள்ளது படகு சவாரி ஆகும்.ஐந்தருவி செல்லும் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த வெண்ணமடைக்குளத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி விடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆண்டு சீசன் முன்னதாக துவங்கியதுடன், தற்போது நல்ல மழை பெய்து வருவதால் வெண்ணமடைக்குளத்தில் தண்ணீர் நிரம்பியது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் படகு சவாரி துவங்கிய நிலையில் இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரத்திலேயே தண்ணீர் நிரம்பியது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படகு குழாமை சுற்றி படகு துறை அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. இன்னும் ஒரு சில திங்களில் படகு சவாரி துவங்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே தற்போது ஒரு சில படகுகளே தயார் நிலையில் உள்ளதால் மீதமுள்ள படகுகளை விரைந்து சீரமைப்பதுடன், கூடுதல் படகுகளும் விடவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றாலத்தில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வவ்போது சாரல் மழை பெய்தது. மேலும் மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. தொடர் மழை காரணமாக ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று மதியத்திற்கு பிறகு பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை மாலை வரை நீடித்தது.