செல்லப் பிராணிகள் வளர்க்க லைசென்ஸ்! 3 நாட்களில் இவ்வளவு விண்ணப்பமா?
சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்வெய்லர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்கள் 5 வயது சிறுமியை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போலவே, மற்ற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள மற்ற பகுதிகளிலும் தெருவில் இருக்கும் நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்த சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தும் இருந்தது. அதில் குறிப்பாக சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கண்டிப்பாக அதற்கான உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் பெற தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இணையதள வாயிலாகவும் ரூ50 செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம், என்று அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெற http://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டு வெளியான நாளில் இருந்து விண்ணப்பம் அதிகரித்து கொண்டு செல்கிறது.
அதன்படி, கடந்த 10 மாதத்தில் ஆன்லைன் மூலம் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற்ற நிலையில், இது கட்டாயமாக்கப்பட இந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.