சற்று நேரத்தில்…தமிழகம் முழுவதும் வாயை வெள்ளை துணியால் கட்டி அறப்போராட்டம் – காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை எனவும்,அதே நேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:
“முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது.அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை தற்போது விடுதலை செய்திருக்கிறது
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்”,என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,தங்களது மன உணர்வை வெளிப்படுத்தும் இன்று (19.5.2022) காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு கட்சியினர் அனைவரையும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளை (19.5.2022) அறப்போராட்டம். ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ – தலைவர் திரு @KS_Alagiri https://t.co/lf7FeGDNyw
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 18, 2022