2026-ல் த.வெ.கவுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!
பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில் முக்கிய அறிவிப்பாக ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்தார். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
விஜய் இப்படி அறிவித்துள்ள காரணத்தால் மற்ற கட்சித் தலைவர்களிடமும் விஜய் கட்சியுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் கூட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் த.வெ.க கட்சியுடன் கூட்டணியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “தேர்தலுக்கு இன்னும் 1 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது எனவே, வரும் காலங்களில் அது பற்றி முடிவு எடுக்கப்படும்” எனப் பதில் அளித்து இருந்தார்.
அதே போலத் தான், இந்த கேள்விக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருக்கிறார். இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர் ஒருவர் “2026 தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமையுமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி “சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓன்றரை ஆண்டுக் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” எனப் பதில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் ” 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி 2026 இல்லை எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை கூறிவிட்டேன்” எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.