அரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..!
தமிழ்நாடு தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த காலிப் பணியிடங்களுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு , உடல் தேர்வு நடத்தப்படும்.
எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கும் , உடல்தகுதி தேர்வு 15 மதிப்பெண்களுக்கும் வழங்கப்படும். என்சிசி மற்றும் விளையாட்டுகளுக்கு சான்றிதழ் அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தத்தனுரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த தேவப்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக ரகுபதி என்பவர் தேர்வு எழுதி உள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்மாறாட்டம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.