நெருங்கும் தவெக மாநாடு – சேலத்தில் நாளை முக்கிய ஆலோசனை.!
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.
சேலம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுளுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் நாளை (அக்.18) பயிலரங்கம், கலந்தாய்வு நடைபெறுகிறது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில், இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை, கொள்கைகள், கருத்தியலை அணுகும் முறை, மாநாட்டைச் சிறப்பிப்பது. கொள்கைத் திருவிழா விளக்கவுரை, மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு
ஆகிய தலைப்புகளில் பயிலரங்கு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், நாளை (18.10.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.
- இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை.
- கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை.
- சமூகப் பொறுப்புணர்வு. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது.
- வெற்றிக் கொள்கைத் திருவிழா -விளக்கவுரை.
- மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு.
எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.