அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!
CAA Act : 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு வரையில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத மதத்தினர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்ட CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நேற்று மத்திய அரசு அமல்படுத்துவதாக அறிவித்தது. இந்த சட்டம் 2019ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதசார்பற்ற இந்திய நாட்டில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அதன் மூலம் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது என கூறி எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிடுகையில், தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் என்றும், இதற்கு ஆதரவு அளித்ததாக கூறி அதிமுக கட்சிக்கும் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Read More – நாடு முழுவதும் CAA குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மோடி அரசு அறிவிக்க நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்கள் கால அவகாசம் எடுத்துள்ள்ளது. சிஏஏ விதிகளை அறிவிப்பதற்கு எடுக்கப்பட்ட நேரம் என்பது பிரதமரின் அப்பட்டமான பொய்களின் மற்றொரு நிரூபணமாகும் என விமர்சித்து உள்ளார்.
Read More – PM Modi : அக்னி- 5 சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவிப்பு ..!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.