ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் – காங்கிரஸ்
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்த்தது. அதில், உண்மைக்கு அப்பாற்பட்ட பல தகவல்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்று இருந்தன. பதவியின் கண்ணியத்திற்கு மதிப்பளித்து ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். தவறான தகவல் இடம்பெற்று இருந்ததால் அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் – காங்கிரஸ்
மேலும், பேரவையில் உரையாற்றிய வீடியோவையும் ஆளுநர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இன்று விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தற்போது, சட்டப்பேரவையின் கேள்வி – பதில் நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனிடையே, ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி காங்கிரஸ் கடிதம் அளித்துள்ளது.
அதாவது, தமிழக சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அளித்துள்ளார்.