“உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

cm stalin fisherman

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்தத காரணத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது மட்டுமின்றி சமீபத்தில், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அந்த கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ” 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த GPS கருவிகள், VHF கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல்வர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்