நேரடி விவாதத்திற்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா? -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

Default Image

நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்றுள்ளார்

நேற்று ஈரோட்டில் நடந்த பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நான் இப்போது திமுக தலைவர் ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு அழைக்கிறேன்.தைரியம் இருந்தால் ஒரு கட்சியின் தலைவராக ஸ்டாலின் எந்த இடத்திற்கும் வரலாம்.நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.எந்த இடத்திற்கும் துண்டுச் சீட்டு இல்லாமல் மு.க.ஸ்டாலின் அழைத்தால் வருவதற்கு நான் தயார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,முதலமைச்சர் பழனிசாமியின் சவாலை ஏற்றுள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?’ என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி நேற்று சவால் – சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்!

அதற்கு முன்னர் திரு. பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து- “ சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்” என்று திரு.பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும். “எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி- மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.
அதே மாதிரி “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே- விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும்- உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் – என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள்- என்ன கலெக்‌ஷன் செய்துள்ளீர்கள்- எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறேன். நான் ரெடி- முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா?  என்று  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்