“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!
நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று, என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டத்துடன் பேசியுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டத்துடன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது, நாளை முதல் வேறு மாதிரியாக தான் பிரச்சினைகளை டீல் செய்வோம். அண்ணாமலை திரும்பியதால் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் களேபரமாக ஆகிவட்டதாக சில அமைச்சர்கள் கூறுவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை நான் இனிமேல் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் நான் விரதம் இருந்து முருகனிடம் முறையிடவும் முடிவெடுத்துள்ளேன். அதைப்போல, திமுக அரசுக்கு எதிராக சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டமும் நாளை நடத்தப்படும். நாளை காலை 10 மணிக்கு என்னுடைய வீட்டிற்கு வெளியே எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவேன்.
இனி எந்த சம்பவங்கள் நடந்தாலும், பாஜக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பதில் வீட்டுக்கு வீடு போராட்டம் நடத்தப் போகிறோம். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகி இல்லை என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், திமுக நிகழ்ச்சி பத்திரிகையில் அவரது பெயர், கட்சிப் பொறுப்போடு இருக்கிறது. முரசொலி நாளிதழில் ஞானசேகரனின் பெயர் பொறுப்புடன் இடம்பெற்றுள்ளது. அதைப்போல, பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து திமுக தவறியுள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது.
தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடு ஆகும். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட (FIR) வெளியானது எப்படி? காவல்துறையினரை தவிர வேறு யார் (FIR)-ஐ வெளியிட்டிருக்க முடியும். பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிபோல் எழுதி FIR பதிய போலீசாருக்கு வெட்கமாக இல்லையா? சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? நான் மட்டும் இந்த நேரத்தில் காவல் துறையில் இருந்திருந்தால் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும்.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும். ” எனவும் அண்ணாமலை மிகவும் காட்டத்துடன் தெரிவித்தார். முன்னதாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை நான் இனிமேல் செருப்பு அணிய மாட்டேன் என கூறியதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் ஏற்கனவே கூறியபடி காலணியை அண்ணாமலை கழட்டிவிட்டு தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.