கடவுளின் பெயரால் ஆணையிட்டு… மாநிலங்களவை எம்.பி-யாக பதவி ஏற்றார் இசைஞானி இளையராஜா.!
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா இன்று தனது பதவியை மாநிலங்களவையில் ஏற்றுக்கொண்டார்.
கலைத்துறை, விளையாட்டுத்துறை, சமூக சேவை, இலக்கியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை குடியரசு தலைவர், அதில் சிறந்த 12 நபர்களை தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யலாம்.
அப்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது 12 பேரை தேர்வு செய்து இருந்தார். அதில், தமிழகத்தை சேர்ந்த பி.டி.உஷா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், பாகுபலி கதாசிரியர் விஜேந்திர பிரசாத் உட்பட 12 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கடந்த திங்கட்கிழமை மாநிலங்களவை கூடும்போது இளையராஜாவை தவிர மற்ற அனைவரும் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா மாநிலங்களவையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உறுதிமொழி எடுத்து ஏற்றுக்கொண்டார். அதில் முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்தினார் இசைஞானி.
இறுதியாக மாநிலங்களவை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடவுளின் பெயரால் நான் ஆணையிட்டு கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார் இசைஞானி இளையராஜா.