நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் எக்ஸ் வலைதள பக்க முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அதில் நெற்றியில் குங்குமம் இல்லாத படத்தை பதிவேற்றியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்ததும் அக்கட்சி தலைவர் விஜயின் புகைப்படம் தான். தற்போது இருப்பதும் அதே விஜயின் புகைப்படம் தான். ஆனாலும் , இந்த புகைப்பட மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக, தொகுதி வாரியாக நல்ல மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் சரி, மற்ற சில விழாக்களிலும் சரி, விஜய் நெற்றியில் சிறிய அளவில் திருநீறு அல்லது குங்குமம் வைத்திருந்தார். அதே போல, தமிழக வெற்றிக் கழக கட்சியின் சமூக வலைதள பக்கத்திலும் முகப்பு புகைப்படமானது, விஜய் நெற்றியில் சிறிய அளவில் குங்குமம் வைத்திருந்த புகைப்படம் தான் பதிவேற்றம் செய்ப்பட்டிருந்தது.
இப்படியான சூழலில், இன்று த.வெ.க கட்சி எக்ஸ் வலைதள பக்கத்தில் நெற்றியில் குங்குமம் இல்லாத புகைப்படத்தை மாற்றியுள்ளார். மேலும், அண்மையில் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். தந்தை பெரியார் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார் த.வெ.க தலைவர் விஜய்.
மாணவர்கள் மத்தியில் விஜய் பேசும்போது கூட , தந்தை பெரியார், காமராஜர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணாவை பற்றி படியுங்கள். அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார். இதனால் விஜய் திராவிட அரசியலை தான் கையில் எடுக்க போகிறார் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. ‘ஏற்கனவே திராவிட அரசியல் தமிழகத்தில் வேரூன்றின்றி இருக்கும்போது. மீண்டும் விஜய் திராவிட சித்தாந்தத்தை கொண்டு வருவதை மக்கள் ஏற்பார்களா.?’ என்று விமர்சனம் எழுந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, தந்தை பெரியார், மாணவர்களுக்கு அட்வைஸ் என விஜயின் அரசியல் பாதை திராவிடமாக இருந்தாலும், அது எப்படி மாநில முக்கிய கட்சிகளில் இருந்து மக்கள் மத்தியில் வேறுபட்டு நிற்கப்போகிறது என்பது த.வெ.க தலைவர் விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வில் தான் தெரியவரும்.
வரும் அக்டோபர் 27ஆம் தேதி த.வெ.க கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தனது கட்சி கொள்கைகள் பற்றி அக்கட்சித் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது தான், விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னிறுத்த போகிறார்.? திராவிட அரசியலாக இருந்தாலும் அது எப்படி மக்கள் மத்தியில் மாறுபட்டு இருக்கும் என்பது தெரியவரும்.