அரிட்டாபட்டி சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சித்தால் அது நடக்காது.! – எம்பி சு.வெங்கடேசன் ஆய்வு.!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பாறை, குன்றுகள் இயற்கை சங்கிலிகள் இன்னும் அரிட்டாபட்டியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதன் மாண்பு குறையாமல் பாதுகாக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கடந்த 2020 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
தற்போது அது குறித்து, திட்டமிடலுக்காக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரிட்டாபட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்ட அரிடாப்பட்டி பற்றியும் அங்கு மேற்கொள்ள உள்ள திட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘முதலில் இந்த பல்லுயிர் பாரம்பரிய திட்டம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அரிட்டாபட்டியை வெறும் சுற்றுலாத்தலமாக மாற்ற திட்டமிட்டு இருந்தால் அது இங்கு நடக்காது.
முதலில் ஓர் காட்சி கூடம் அமைக்க வேண்டும். ஏன் இந்த பகுதி பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டது.? என அதில் விளக்கப்பட வேண்டும். இங்குள்ள பாறை, குன்றுகள் பற்றிய சிறப்புகள் அதில் இடம் பெற வேண்டும்.
இந்தியாவின் முன்மாதிரியான பல்லுயிர் பகுதியாக அது அமைய வேண்டும். 3000 ஆண்டுகள் முன்பான எழுத்துகள், வரலாற்று இயற்கை சங்கிலிகள், ஓடை, பாறை, பறவைகள் இன்னும் அந்த இயற்கை மாறாமல் இருப்பதால் இப்பகுதி பல்லுயிர் பாரம்பரிய பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் குலையாமல் அதற்காக திட்டமிட வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.