இதனை உடனே களையாவிட்டால் சாதி மோதல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும் – ஓபிஎஸ்
பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது. “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில், தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்பட்டும், ஆங்காங்கே தலைகாட்டுவது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும்.
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், ஒரு பாவச் செயல், ஒரு குற்றம் என்பதை அனைவரும் உணரும் வகையிலும், எல்லோரையும் சகோதர, சகோதரிகளாக பாவிக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரின் மனங்களில் நிலைநிறுத்தும் வகையிலும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றும் வகையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான் தீண்டாமை ஒழிப்பு என்பது முற்றிலும் அகற்றப்படும். இல்லையெனில், சாதி மோதல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டிற்கு நல்லதல்ல.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சாதி மோதல்களை தவிர்க்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் தேவையான ஆலோசனைகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
இது போன்ற சம்பவங்களை உடனுடக்குடன் களையாவிட்டால் சாதி மோதல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும். pic.twitter.com/LBemMBjGDq
— O Panneerselvam (@OfficeOfOPS) September 19, 2022