திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை அழித்திருப்பார்கள் – அமைச்சர் பொன்முடி
விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ தமிழை அழித்திருப்பார்கள். பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் போது எதற்காக இந்தி? என கேள்வி எழுப்பினார். இருமொழி கொள்கையை கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்தியிருக்கிறோம். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தியை கற்றுக்கொள்ள விரும்போவோர் இந்தியை கற்கலாம். கட்டாய பாடமாக ஹிந்தியை படிக்க வேண்டும் என்றால் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார்.
மேலும், புதிய கல்விக் கொள்கையில் 3-ஆம் வகுப்பிலேயும், 5-ஆம் வகுப்பிலேயும், 8-ஆம் வகுப்பிலும் பொதுதேர்வு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால் ஆரம்பத்திலேயே நிறைய பேரின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தான் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.