சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றி வந்தால்.., ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து..!

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலம் எடுக்கப்படும்.
- மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 66(1) மற்றும் பிரிவு 207-ன் கீழ் அனுமதி சீட்டு மற்றும் பதிவு சான்றை மீறிய குற்றத்திற்காக வாகனம் சிறை பிடிக்கப்படும்.
- மேற்கண்ட குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421 -ன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.
- மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192(A)-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.10,000/- நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.
- சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேலும், உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு உத்தரவின் படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்படும்.
- எனவே பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றால் , மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.