சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா,”சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தான் அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து,நீட்தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்,ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கறுப்புச் சட்டம்:
“இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றைமயமாக்கலையும், அதிகாரக்குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத்தம்பி சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.
சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும்:
திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது;
கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன்.
கேலிக்கூத்து:
அறிவியலுக்கும், அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று,அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், ஆபாசமாகப் பேசுவதும், சமூக விரோதி, தேசத்துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென சனநாயக விரோதங்களை அரங்கேற்றி வரும் பாஜக, தம்பி சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது.
என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா?
தம்பி சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்; பாஜகவின் ஆட்சிமுறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டு வருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா? எங்களை எதிர்கொள்ளத் துளியளவாவது துணிவிருக்கிறதா? எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்.
மோசமான எதிர்விளைவுகள்:
தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப் பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…