அதிமுகவின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜக தான் தெரியும் – ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்கக்கூடாது என்றும் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக எனவும் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜக தான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ், பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் முதல்வர் எதுவும் கேட்கவில்லை. தமிழ்நாடுதான் இந்தியா, இந்தியாதான் தமிழ்நாடு என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார். தேர்தல் முடிவுகளை பார்க்காமலேயே என்னால் இதனை சொல்ல முடியும். ஏனென்றால், அது நீங்கள் எடுத்த முடிவுதான். தங்களது சில நண்பர்களின் நலனுக்காக மோடியும், அமித்ஷாவும் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என குற்றசாட்டினார்.
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள். தமிழக முதல்வரும் அதை விரும்பவில்லை. ஆனால், அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்திய அரசின் வசம் இருப்பதால் தவறு செய்த அதிமுக முதல்வர் தலைகுனிய கட்டாயம் நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி செய்துள்ள தவறு குறித்து அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை முதல்வர் பழனிசாமி. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஏன் நிறைவேற்றினீர்கள் என மோடியிடம் எடப்பாடி கேட்க மாட்டார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என விமர்சித்துள்ளார்.