உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டுப்போடுமாறு வாக்காளர்களுக்கு அக்கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலானது நாளை நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தேர்தலில் பாமகவுக்கு மக்கள் வாக்களிக்குமாறு அதன் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது:
நாளை வாக்குப்பதிவு:
“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களே!
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 1577 ஊராட்சித் தலைவர், 12,252 ஊராட்சி உறுப்பினர் பணியிடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் சில இடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களுக்கு மட்டும் நாளை மக்கள் வாக்களிப்பார்கள்.
வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் நேற்று மாலையுடன் பரப்புரை முடிவடைந்து விட்ட நிலையில், இன்றைய பொழுது யாருக்கு வாக்களிக்கலாம்? எதற்காக ஒருவருக்கு வாக்களித்தாக வேண்டும்? நமது விலைமதிப்பற்ற வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து நீங்கள் சிந்தித்து முடிவெடுப்பதற்கானதாகும்.
ஆட்சியை தாங்கிப் பிடிப்பவை:
மீண்டும், மீண்டும் நான் கூறி வருவதைப் போன்று இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் உள்ளாட்சிகள் தான். உள்ளாட்சிகள் மட்டும் வலிமையாக இருந்தால் ஒரு மாநிலம் முன்னேறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஏனெனில் மாநில அளவிலான ஆட்சியையும், தேசிய அளவிலான ஆட்சியையும் தாங்கிப் பிடிப்பவை உள்ளாட்சிகள் தான். மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தாலும், அவற்றை செயல்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகள் தான். அவை தான் மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றன.
புற்றுநோய்:
மாநில அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுபவையும் உள்ளாட்சி அமைப்புகள் தான். அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் நல்லவர்கள் இருந்தால், மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மாறாக, உள்ளாட்சி அமைப்புகள் தவறானவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டால், ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளை சீர்கேடு என்ற புற்றுநோய் பீடித்து புரையோடி விடும். அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் சீரழித்து விடும்; அது சரி செய்ய முடியாத ஆபத்தாகும்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சிகளை திறம்பட நிர்வகிக்கவும், தன்னலம் கருதாமல் மக்கள் நலனுக்காக பாடுபடுவதற்கும் பெயர் பெற்றவர்கள். உள்ளாட்சிகளை ஜனநாயக படிநிலையில் கடைசியில் இருக்கும் அமைப்புகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் கருதியதில்லை.
பாமக வென்ற விருது:
மாறாக, ஜனநாயகத்தில் முதல் நிலையில் உள்ள அமைப்புகளாகத் தான் கருதுகிறது.அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடத்தப்பட்டதை விட, மிக அதிக எண்ணிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளோம். அத்தகைய பயிற்சிகளைப் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியினர் சிறந்த நிர்வாகத்திற்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.
எனது விருப்பம்:
அவ்வாறு சிறப்பாக சேவை செய்தவர்கள் மீண்டும், மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போதும் கூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் தான். பா.ம.க.வின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
கடந்த காலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கிடைத்து வந்த சிறந்த நிர்வாகம், இனி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிடைக்க வேண்டும். அது தான் எனது விருப்பமும், நோக்கமும் ஆகும்.
கூட்டணி தவிர்ப்பு:
அதனால் தான் இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியைக் கூட தவிர்த்து விட்டு அதிக எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுகிறது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது. அவை மக்களின் தேவை அறிந்து சரியாகவும், முறையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். அரசின் நிதியைக் கொண்டும், நலத் திட்டங்களைக் கொண்டும் கிராமங்களை தன்னிறைவு பெற்றவையாக மாற்ற வேண்டும். அது தான் மகாத்மா காந்தியடிகளின் கனவு ஆகும். அதை நிறைவேற்றுவது பா.ம.க.வினரால் தான் சாத்தியமாகும்.
முழு நேரப்பணி:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர் மக்கள் பணியையே முழுநேரப் பணியாக செய்வார்கள். தேர்ந்தெடுத்த மக்கள் அழைத்தால் நேரம் பார்க்காமல் ஓடி வந்து உதவுவர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதிகள் அதிகாரத்தை சுவைப்பவர்களாக இருக்காமல், மக்களின் நலனுக்காக அதிகாரத்தை சுமப்பவர்களாக இருப்பார்கள். ‘‘உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர், அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து எழும் போது, தங்களின் உடைகளில் ஒட்டும் தூசியைக் கூட தட்டிவிட்டு வர வேண்டும்; உள்ளாட்சிகளிலிருந்து தூசைக் கூட எடுத்து வரக்கூடாது’’ என்று பயிற்சி வகுப்புகளின் போது நான் கூறுவேன். அதைக் கடைபிடித்து பா.ம.க. நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான நிர்வாகத்தை வழங்குவார்கள்.
உங்கள் குறைகள் தீர்ந்து விடும்:
அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட எந்த செயலையும் அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்காமல், அன்றைக்கே செய்பவர்களாக இருப்பார்கள். அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளாக இருந்தால், அதிகாரம் பெற்றவர்களை அணுகி, கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவார்கள். அவர்களால் சாத்தியப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நானே களமிறங்கி குரல் கொடுப்பேன். மொத்தத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் குறைகள் தீர்ந்து விடும் என்பது உறுதி.
இதுவும் உறுதி:
எனவே, உள்ளாட்சித் தேர்தல்களை உங்களின் குறைகள் களையப்படுவதற்கான வாய்ப்பாகவும், உங்கள் வாக்குரிமையை உங்களுக்கு கிடைத்த வரமாகவும் கருதிக் கொள்ளுங்கள். அந்த வரத்தை பயன்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு மாம்பழம் சின்னத்திலும், ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு ஆங்காங்கே ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டுகிறேன். அதன்மூலம் உங்களின் நிகழ்கால குறைகள் களையப்பட்டு எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவது உறுதி”,என்று தெரிவித்துள்ளார்.