நீங்க இதை செஞ்சிருந்தால் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இருந்திருக்கும்.! அன்புமணி ராமதாஸ் பேட்டி.!
மத்திய பட்ஜெட் 2024 : எங்கள் கூட்டணிக்கு 25 எம்பிக்கள் கிடைத்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் பட்ஜெட்டில் இருந்து இருக்கும் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் NDA கூட்டணியில் முக்கிய பங்காற்றும் நிதிஷ்குமார் ஆளும் பீகார் மாநிலத்திற்கும், சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக திட்டங்கள், நிதிகள் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பொதுவான திட்டங்கள், நிதி அறிவிப்புகளை தவிர்த்து தனித்து ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை. தமிழ் என்ற பெயரோ, திருக்குறள் வடிவிலோ கூட தமிழ் இடம்பெறவில்லை. இதனை தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இது குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
மொத்த மத்திய பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய். அதில் தமிழகத்திற்கு என திட்டங்கள் இருக்காதா என்ன.? ரயில்வே பட்ஜெட் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி. அதில் இந்தாண்டு தமிழகத்திற்கு அதிகம் வந்துள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் இருக்கிறது. பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயரையும் கூறிக்கொண்டு இருக்க முடியாது என கூறினார்
மேலும், தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து 25 எம்பிக்களை ஜெயிக்க வைத்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்று இருக்கும் என கூறிவிட்டு, பின்னர் , இது பதில் இல்லை சும்மா பேச்சுக்கு கூறினேன் என செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்ஜெட் பற்றி கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் NDA கூட்டணியில் பாமக முக்கிய அங்கம் வகித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகிய தேர்தலில் NDA கூட்டணி ஆதரவுடன் பாமக களமிறங்கி இருந்தது.