பதவி விலகனும் இல்லைனா இபிஎஸ் அவமரியாதையை சந்திப்பார்! ஓபிஎஸ் பதிலடி!
எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என இபிஎஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இன்று தூத்துக்குடி மட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் ” பிரிந்தது பிரிந்தது தான் இணைவதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. ஏனென்றால், பிரிந்தது மட்டுமில்லை இந்த கட்சி எதிரிகளிடம் அடைமானம் வைப்பதை என்னால் பார்க்க முடியாது. அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் ஓபிஎஸ் தலைமையில் ரவுடிகளை அழைத்து சென்று உடைத்தார்.
கட்சி தலைமை கோவில் போன்றது அதனை என்றைக்கு உடைத்தார்களோ அன்றைக்கே அவர் கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படையில் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பே இல்லை” எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என இபிஎஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” கட்சியில் இணையவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பிரிந்து கிடைக்கும் அதிமுக ஒன்றாக இணையவேண்டும் என்பது தான் ஆசை. அப்படி இணைந்தால் தான் வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்.
இந்த விஷயத்தை தான் நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இது புரியாமல் பேசுகிறார்கள். அவருக்கு (இபிஎஸ்) எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்துகொண்டு இருக்கிறார். ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார், ஆனால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் மரியாதையாக விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” எனவும் எடபாடி பெயரை குறிப்பிடாமல் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.