தைரியம் இருந்தால் உங்கள் தலைவர்களை பற்றி பேசுங்கள்.. அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமர் சவால்.!
மதுரை: ஜெயலலிதாவை பற்றி கூறி பாஜகவினர் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் தலைவர்களின் பெருமைகளை கூறி மக்களிடம் ஆதரவு பெறுங்கள் – ஆர்.பி.உதயகுமார்.
சில தினங்கள் முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் பற்றி தனியார் செய்தி சேனல் நேர்காணலில் , ஜெயலலிதா ஓர் இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தான் இந்து என்பதை வெளிப்படியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்றும் கூறிய கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஏற்கனவே அதிமுக சார்பில் அதன் மூத்த நிர்வாகிகள் அண்ணாமலை கூறிய கருத்துக்கள் குறித்து கூறுகையில், ஜெயலலிதா தெய்வ நம்பிக்கை உள்ளவர். ஆனால் இந்துத்துவாவை ஆதரிப்பவர் அல்ல என்றும், அவர் அனைத்து மதத்துக்கான தலைவர் என்றும் கூறி அண்ணாமலை கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்து, மீண்டும் பேசிய அண்ணாமலை, ஜெயலலிதா இந்துத்துவாவை சேர்ந்தவர் தான். அதனை மறுத்து பேசுபவர்களுடன் விவாதம் நடத்த நான் தயார் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் தலைவர்கள் கடைபிடித்த கோட்பாடுகளை அவர்கள் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இங்கு இல்லை. அவர்களை (அண்ணாமலை) அடையாளப்படுத்தி கொள்ள, எங்கள் தலைவர்களை துணைக்கு அழைத்து கொள்கிறார்கள். இந்துத்துவா என்பது தனி விவாதம். அது வேறு. அது பற்றி எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நேரத்தில் பதில் அளிப்பார்.
உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் தலைவர்களை பற்றி மக்களிடத்தில் கூறுங்கள், முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்களின் பெருமைகளை மக்களிடத்தில் கூறுங்கள். அதன் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கை பெற முயற்சி செய்யுங்கள். ஆனால் உங்கள் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து தான் நீங்கள் எங்கள் தலைவர்கள் பற்றி பாராட்டுவது போல கூறி வஞ்ச புகழ்ச்சி அணியாக நீங்கள் கூறி வரும் கருத்துக்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைசச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.