பாஜக கூட கூட்டணி வைத்தால் கதை முடிந்துவிடும்! இபிஎஸ்க்கு திருமாவளவன் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்தும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை : மாவட்டத்தில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி நேற்று நடைபெற்றதில். அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் ” திருமாவளவனை தாண்டி, விடுதலை சிறுத்தைகளை தாண்டி தமிழக அரசியலில் திராவிடத்தை ஒழிக்க ஒருவனாலும் கை வைக்க முடியாது என பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” திமுக 6 முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. அண்ணாவுடன் சேர்த்தால் 7 முறை என்று நான் நினைக்கிறேன்.
திமுக மீதான விமர்சனங்கள் என்பது அண்ணா ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. திமுகவை வீழ்த்தும் முயற்சி இன்றைக்கு நேற்று தொடங்கியது இல்லை. இன்றைக்கு அரசியலில் விடலை பருவத்தில் இருக்கும் சில திமுகவை சவாலுக்கு இழுக்கிறார்கள். ஆனால், அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்களை திமுக முறியடிக்கும். தொடர்ந்து திமுக தான் ஆட்சிக்கு வரும்” எனவும் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய திருமா ” இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்கி முதல் பொதுக்குழு கூட்டம் நடத்திய விஜய் விசிகவை விமர்சனம் செய்கிறார் என்றால் அதற்கு காரணம் நம்மளுடைய கொள்கை நிலைப்பாடு தான். எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்ததற்கும் விடுதலை சிறுத்தைகளின் நிலைபாடுதான் காரணம். தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருப்பதும் விசிக தான். இதனை விமர்சிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது.
அரசியல் களத்தில் அனுபவம் இருந்தால் தான் சிறுத்தைகளின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். சிறுத்தைகளின் போராட்டங்கள் என்ன என்பது தெரிந்திருக்கும். திருமாவளவனை தாண்டி, விடுதலை சிறுத்தைகளை தாண்டி தமிழக அரசியலில் திராவிடத்தை ஒழிக்க ஒருவனாலும் கை வைக்க முடியாது” எனவும் பேசினார்.
அதனை தொடர்ந்து அதிமுக குறித்து அவர் பேசுகையில் ” த.வெ.க தலைவர் விஜய் திமுக மற்றும் த.வெ.கவிற்கு இடையில் தான் போட்டி என்று சொல்கிறார். அவர் சொல்லவருவது என்னவென்றால் அதிமுகவுடன் போட்டி இல்லை அதிமுக தங்களை விட சக்தி குறைந்த கட்சி என்று சவால் விடுகிறார். தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்தும் தப்பித் தவறிகூட பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிசாமி கதை முடிந்துவிடும். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நூறு மோடிகள் வந்தால் கூட தமிழ்நாட்டில் பாஜகவால் தமிழகத்தில் காலூண்ற முடியாது” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.