இனிமே யாராவது மாநாட்டை நடத்தவேண்டும் என்றால் இதை பாருங்கள்! கலைநிகழ்ச்சியில் ரோபோ சங்கர் பேச்சு!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதுரை வலையங்குளத்தில் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. மதுரை அதிமுக மாநாட்டில் “தலைசிறந்த தலைவராக தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்திட காரணம், கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்துவருகிறது.
அதைப்போல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரோபோ சங்கர், காமெடி நடிகர் ராமர், செந்தில், லட்சுமி உள்ளிட்டோர் அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
செந்தில் மற்றும் ராஜலட்சுமி பாடல் பாட ரோபோ சங்கர் டிரம்ஸ் வாசிக்க என மாநாடே மிகவும் களைகட்டியது. பின், மாநாட்டில் எம்.ஜி.ஆரின் குரலில் நடிகர் ரோபோ சங்கர் பேசி மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரையும் நகைச்சுவை செய்து சிரிக்க வைத்தார். இதனை பார்த்த கீழே அமர்ந்திருந்த அமைச்சர்கள் ரசித்துக்கொண்டே இருந்தனர்.
அதன் பின் மேடையில் பேசிய ரோபோ சங்கர் “இனி யாராவது மாநாடு நடத்த வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக இந்த மாநாட்டை பாருங்கள். கட்சி நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி மேடையை ஓரமாக போடுவார்கள், ஆனால் அப்படி செய்யாமல் உங்கள் மேடையை, எங்கள் மேடையாக மாற்றி தந்த எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி” என கூறினார்.