ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செய்து கொல்லப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பா.ம.க.வின் தொடர் போராட்டம் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுனரும் உடனடியாக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுனர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்