#BREAKING: சிலை கடத்தல் – சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!
சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.
சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 20 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில், கடந்த 2000-ஆம் ஆண்டு அந்த சிலை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த 2008-ஆம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்த சுபாஷ் சந்திரகபூரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து தமிழகம் அழைத்து வரப்பட்டார்.
கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 20 சிலைகளில் 6 சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், குற்றச்சாட்டப்பட்ட சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.