‘காவி அணிவிக்க மாட்டேன்…’ – அர்ஜூன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்!
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்.
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது புகைப்படத்திற்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகமும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து, புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கரை உருவத்துடன் சித்தரித்து அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்த சர்ச்சை போஸ்டர்கள் கும்பகோணத்தில் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன், விபூதி குங்குமம் பூச மாட்டேன், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டேன் என உயர் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்தார்.
இதன்பின், உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்க சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.