இனி படங்களில் நடிக்கமாட்டேன்.! செயல்பாடுகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில்.! அமைச்சர் உதயநிதி பேட்டி.!
விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற முயற்சி செய்வேன் என அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி பேட்டி.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, வாழ்த்திய அனைவரருக்கும் நன்றி. முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதனை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். இதனால், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான பணிகள் நடக்கும்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகளை பெற்றபோதும் விமர்சனங்கள் வந்தன. என் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் தருவேன் என கூறினார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் என் மீதான குறைகள், விமர்சனங்களை முன்வைத்தால் அதை சரி செய்வேன் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனி படங்களில் நடிக்கமாட்டேன். கமல் தயாரிப்பில் உருவாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். தற்போது நடித்து வரும் மாமன்னன் படம்தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.