“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
கடந்த முறை இதே காட்பாடியில் நடந்த தேர்தலின் போது நான் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன் என அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை மும்மரமாகச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் மாவட்டத்தின் காட்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தன்னை கொல்ல வந்தார்கள் என்றால் கூட அவர்களை நான் மன்னித்துவிடுவேன். ஆனால் கட்சிக்குத் துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர் ” கடந்த முறை இதே காட்பாடியில் நடந்த தேர்தலின் போது நான் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். ஆனால், இந்த முறை அதனை நடக்கவிடமாட்டேன். ஏதோ கொஞ்சம் அசந்துவிட்டேன்.. இல்லனா கண்ணுல விரல விட்டு ஆட்டியிருப்பேன்.. இந்த துரோகிகளைக் களையெடுத்து விட்டுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவேன்.
காட்பாடியில் திமுகவினர் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் வருகிறேன்.
என்னை கொலை செய்ய வந்தாலும் நான் ஒருவரை மன்னிப்பேன், ஆனால் கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன். திமுக என்னுடைய கட்சி..நான் வளர்த்த கட்சி” எனப் பேசினார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பகுதியிலிருந்து, சிலர் தவெக கட்சியில் இணைந்ததாக ஏற்கனவே தகவலும் வெளியாகி இருந்தது. எனவே, அதனைக் குறிப்பிட்டுத் தான் கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியிருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.