“அதிமுகவில் நிச்சயம் தலைமை ஏற்பேன்” – சசிகலா அதிரடி!

Default Image

சமீப காலமாக வி.கே. சசிகலா கடந்த ஆன்மீகப் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி,கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய சசிகலா,தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார். அவ்வப்போது சசிகலாவின் ஆன்மிக பயணம் ஒரு அரசியல் பயணமாகத்தான் பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,தென் மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா,சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது காரில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய அவர்:”கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.

இந்த ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ஒரு வருடம் கடந்தும் இன்னும் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதியோர் உதவித்தொகை கொடுக்காமல் இருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் மனதில் திமுக ஆட்சி ஒரு வெறுப்பை தான் ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

மேலும்,”மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை போன்றே குறையில்லா ஆட்சியை கொடுப்பேன், அப்படித்தான் நாங்கள் விரும்புகிறோம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். மேலும், அதிமுகவை கைப்பற்றுவதற்கு ஒன்றுமில்லை, அதிமுக எங்கள் கட்சி, தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். விரைவில் அரசியல் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூரை அடுத்த கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற சசிகலா நிச்சயம் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“அரசியலில் புதிய இயக்கம் தொடங்க போவதில்லை.அதிமுக தொண்டர்கள் எங்களோடு உள்ளனர்.எனவே,அதிமுகவின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கும்.நிச்சயம் நான் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்