பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

anbumani and ramadoss

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார். அது என்னவென்றால்  ” கட்சியின் நிறுவனர் எனும் பொறுப்பில் இருக்கும் நானே, கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் செயல்படுவார். அடுத்தடுத்த முடிவுகள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு செய்யப்படும்.” என முக்கிய அறிவிப்பை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும்.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.

எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

மீண்டும் சொல்கிறேன்… அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்” எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்